Tuesday 28 February 2012

`தி ஆர்டிஸ்ட்' படத்திற்கு 5 ஆஸ்கார் விருதுகள்


       மெரிக்காவின்  லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 27 ம் தேதி   நடந்த 84-வது ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில்`தி ஆர்டிஸ்ட்' என்ற கருப்பு-வெள்ளை படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த ஆடைவடிவமைப்பு, சிறந்த இசை ஆகிய பிரிவுகளில் 5 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. இது வசனமே இல்லாத படம்.

 படத்தின் இயக்குநர் மிச்சேல் ஹசானாவிசியசுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. இதற்கு முன் 1929-ம் ஆண்டு 'விங்க்ஸ்' என்ற வசனம் இல்லாத (சைலன்ட்) படத்திற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.    ஆஸ்கார் விருதுபெற்ற முதல் படமும் இதுதான். 

     சிறந்த காட்சியமைப்பு (விஷுவல் எபக்ட்), சிறந்த பின்னணி இசை, எடிட்டிங் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவில் 5 விருதுகளை ' ஹுகோ' என்ற படம் தட்டிச்சென்றது. 

          சிறந்த ஒலிப்பதிவு மிக்ஸிங் ‘ஹுகோ படத்தில் பணியாற்றிய டாம் பிலிஸ்மேன், ஜான் மிக்லே, சிறந்த ஒலிப்பதிவு எடிட்டிங் பிலிப் ஸ்டாக்டன், எஜின் கியேட்டி (ஹுகோ), சிறந்த எடிட்டிங் தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ படத்துக்காக கிர்க் பாக்ஸடர் மற்றும் அங்கஸ் வால் விருது வென்றனர். 

       சிறந்த காஸ்டியூம் ‘தி ஆர்ட்டிஸ்ட்‘ படத்துக்காக மார்க் பிரிட்ஜஸ், சிறந்த அரங்கத்துக்கு ஹுகோ படத்துக்கு அரங்கம் அமைத்த டான்டே பெரெட்டி, பிரான்சிஸ்கா லோ ஸ்கிவோ, சிறந்த ஒளிப்பதிவு ராபர்ட் ரிச்சர்ட்சன் (ஹுகோ) வென்றனர். சிறந்த விஷுவல் எபெக்ட் விருதை ‘ஹுகோ படத்துக்கு பணியாற்றிய ராப் லெகடோ தலைமையிலான குழு வென்றது. சிறந்த அனிமேஷன் படம் ‘ராங்கோ, சிறந்த செய்தி படம் ‘அன்டிபிடட், சிறந்த திரைக்கதை, மிட்நைட் இன் பாரிஸ் ஆகியவை பெற்றன.

          சிறந்த நடிகர் விருதை 'தி ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின் பெற்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது, ஹாலிவுட்டின் முன்னணி நடிகையான மெரில் ஸ்டிரீப்புக்கு (தி அயர்ன் லேடி) கிடைத்தது. 62 வயதான ஸ்டிரீப் 3-வது முறையாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். இவர், நடித்து 1979 -ம் ஆண்டில் வெளி வந்த `கிராமெர் வர்சஸ் கிராமெர்' மற்றும் 1982-ம் ஆண்டு வெளி வந்த `சோபீ'ஸ் சாய்ஸ்' என்ற 2 படங்களுக்கு ஏற்கனவே இவர் ஆஸ்கார் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

      சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது 82 வயதாகும் பழம்பெரும் நடிகரான கிரிஸ்டோபர் பிளம்மர் ' பிகின்னர்ஸ்' படத்துக்காக பெற்றார். சிறந்த துணை நடிகை விருதை 'ஹெல்ப்' படத்தில் நடித்த அக்டாவிய ஸ்பென்ஸர் பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருது ஆலனுக்கு கிடைத்தது.

       சிறந்த குறும் படத்திற்கான விருது ``சேவிங் பேஸ்'' என்ற படத்துக்கு கிடைத்தது. குறும் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைப்பது இதுவே முதல்முறை. 

சிறந்த பிற மொழி படத்துக்கான விருது ஈரான் நாட்டு படமான ``தி செப்பரேசன்'' என்ற படத்துக்கு கிடைத்தது.

சிறந்த படம், இயக்கம் உள்பட 5 முக்கிய விருதுகளை வென்ற தி ஆர்ட்டிஸ்ட் பட கதை சுருக்கம்: 

 1927ம் ஆண்டில் கதை நடக்கிறது. வசனங்களே இல்லாமல் படங்கள் வெளியான காலம். பட ஹீரோ ஜீன் துஜார்டின் விரைவில் வெளிவரவிருக்கும் தனது புதிய படத்தின் முன்னோட்ட காட்சியை காண வருகிறார். அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கின்றனர். அங்கு வரும் ரசிகை பெஜோ, கூட்ட நெரிசலில் ஜீன் மீது விழுகிறார். அவரை ஹீரோ தாங்கிபிடிக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் ஹீரோ ஜீனுடன் இருக்கும் பெண் யார்? என்று கேட்டு காதல் கிசுகிசு கிளப்பிவிடுகின்றன. 


பின்னர் நடன குழு பெண் தேர்வுக்கு வரும் பெஜோவை சினிமா கம்பெனியில் சேர்த்துவிடுகிறார் ஜீன். படிப்படியாக பெஜோ பெரிய நடிகை ஆகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ அதிபர் தனது நிறுவனத்தின் கடைசி ஊமை படத்தின் தயாரிப்பு பற்றி அறிவிக்கிறார். இதில் கோபம் அடையும் ஜீன் அப்படத்தை தானே இயக்கி, தயாரிக்க முடிவு செய்கிறார். இதில் பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் ஜீனை அவரது மனைவி விரட்டியடிக்கிறார். ஜீனின் சொத்துக்கள் ஏலத்துக்கு போகிறது. இறுதியில் ஜீனுக்கு பெஜோ உதவுகிறார்.


'ஆஸ்கார்' ஒரு முன் கதைச் சுருக்கம் 

1927 ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி 'தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 1929 ம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருது 'அகாடமி விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அமைப்பில் உலகப் புகழ்பெற்ற திரைப்படக்கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.  மொத்தம் 36 பேர் இதன் அங்க உறுப்பினர்களாவர். இதன் முதல் தலைவராக சர். டக்ளஸ் பேர்பேங்க் பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் பிராங்க் கேப்ரா, பெட்டி டேவிஸ், ஜீன் ஹர்ஹோல்ட், ஜார்ஜ் ஸ்டீவன்ஸ், ராபர்ட் இ. வைஸ், கார்ல் மால்டன், ஆர்தர் ஹில்லர், ராபர்ட் ரெஹ்மே, பிரேங்க பியர்சன் உள்ளிட்டோர் இந்த அமைப்பின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.

           'அகாடமி விருது', 'ஆஸ்கார்' விருதாக பெயர் மாறியதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அகாடமி விருதாக வழங்கப்படும் சிலை, பெட்டி டேவிஸ் என்ற நடிகையில் அங்கிளான 'ஆஸ்கார்' என்பவரின் உருவ அமைப்பை ஒத்திருப்பதாக அந்த நடிகை சொன்னதைக் கேட்டு, அன்றிலிருந்து அந்த விருது ஆஸ்கார் என்று பெயர் மாறியதாக சொல்லப்படுகிறது. 

           ஆஸ்கார் என்னும் பெயரை 1934 ம் ஆண்டில் தான் பிரபல ஹாலிவுட் செய்திப் பத்திரிகையாளர் சிட்னி ஸ்கோவ்ஸ்கி முதன் முறையாக பத்திரிகையில் பயன்படுத்தினார். காத்ரீன் ஹெபர்ன் என்ற நடிகை சிறந்த நடிகைக்கான விருதை பெற்றபோது, 'நடிகை ஆஸ்கார் விருதுபெற்றார்' என்று அவர் தனது பத்திரிகையில் குறிப்பிட்டார். 

     1929ம் ஆண்டில் முதன் முதலாக வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது 33 செ.மீ, நீளமுடையதாகவும், தங்கமுலாம் பூசப்பட்டதாகவும் இருந்தது. மேலும், ஒரு திரைப்படச்சுருளின் மீது நிற்பது போன்ற மனித உருவத்துடனும் அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக1940ம் ஆண்டில் தான் ஆஸ்கார் சிலைகள் ஒரே வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உள்ள சிலையை வடிவமைத்தவர், 'செட்ரிக் கிப்சன்' என்ற கலை இயக்குநர். 

       1931ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது வாலஸ் பெர்ரி மற்றும் பிரட்ரிக் மார்க் ஆகிய இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறந்த நடிகர் விருது 'டாம் ஹேங்க்' என்ற நடிகர் பெற்றார். 1993ம் ஆண்டில் 'பிலடெல்பியா' என்ற படத்திற்கும், 1994ம் ஆண்டில் 'பாரஸ்ட் கேம்ப்' என்ற படத்திற்கும் அவர் விருதுபெற்றார். ஜாக்கஸ் ஒய்ஸ் கோல்டியூ என்ற நடிகர் 1956, 1959, 1964, ஆகிய ஆண்டுகளில் 3 முறை விருதுகளை பெற்றுள்ளார். 




No comments:

Post a Comment