Tuesday 28 February 2012

கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை


நாம் மனித மாமிசம் உண்டவர்கள்

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் மகாத்மா காந்தி, ''பசுவின் பாலைக்குடிக்காதீர்கள். அது மாட்டுக்கறியின் சாறு '' என்றார். உடனே ராதாகிருஷ்ணன், ''அப்படியானால், நாம் எல்லோருமே மனித மாமிசம் உண்டவர்கள்தான்'' என்றார். ''எப்படி?'' என்று கேட்டார் காந்திஜி. '' நாம் அனைவரும் தாயின் பால் குடித்துதானே வளருகிறோம். அதை மனித மாமிசத்தின் சாறு என்று கூறலாம் அல்லவா?'' என்றார்.
காந்திஜி பதில் சொல்லாமல் அமைதியானார். 

எனக்கு தகுதி இல்லை

ஒரு குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைக்க, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியை அழைத்திருந்தார்கள். லால்பகதூர் சாஸ்திரி ஒரு நிமிடம் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். அவர் என்ன  பேசினார் தெரியுமா? 
''நான் 6 குழந்தைகளுக்கு தந்தை. எனவே, இங்கு பேசுவதற்கு எனக்கு சிறிதும் தகுதி இல்லை'' என்றார். 

முழுமையான ருசி

மாவீரன் நெப்போலியன் தன் அமைச்சரவை சகாக்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். விருந்தில் எல்லோருக்கும் பழச்சாறு பரிமாறப்பட்டது. குடிக்கத் தொடங்கும் சமயத்தில் ஒரு மாபெரும் சத்தம் அனைவரின் காதுகளையும் துளைத்து திடுக்கிட வைத்தது. நெப்போலியனைத்தவிர மற்ற அனைவரும் பதறி பழச்சாறை கொட்டிவிட்டார்கள். நெப்போலியன் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி அமைதியாக பழச்சாற்றை ருசித்துக்கொண்டிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு, ''பழச்சாற்றை அருந்த துவங்கி செயலில் இறங்கிவிட்டால், அடுத்த சிந்தனை கூடாது. நாம் மேற்கொள்ளும் காரியம் அருந்துதல் மட்டுமே. அதில், முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே காரியம் கைநழுவாது. முழுமையான ருசியும் கிடைக்கும்.'' என்று விளக்கமளித்தார். 

தாயின் பாரம்

விவேகானந்தரிடம் ஒருவன் ''சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும் தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?'' என்று கேட்டான். அவனிடம் விவேகானந்தர், ''அதோ அங்கே தெரிகிறதே.. அந்த கல்லை எடுத்துவா'' என்றார். அவன் அந்த கல்லை தூக்கி வந்தான். அது இரண்டு கிலோ எடை கொண்டது. '' இந்த கல்லை உன் மடியில் நாலுமணி நேரம் கட்டிக்கொண்டு இரு. பிறகு என்னிடம் வா'' என்றார் விவேகானந்தர். அவனும் அந்த கல்லை நாலு மணிநேரம் கட்டிக்கொண்டு இருந்தான். அவனுக்க சிரமமாக இருந்தது. எழும்பிப் போனான். ''சுவாமி, என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. சிறு சந்தேகம் கேட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனை தந்துவிட்டீர்களே? என்றான். விவேகானந்தர் புன்னகைத்தார். ''இந்த இரண்டு கிலோ கல்லை உன்னால் நாலு மணிநேரம் கூட வைத்திருக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாயானவள் ஏறக்குறைய பத்து மாதம் குழந்தையை சுமக்கிறாள். அதை அவள் பாரம் என்று அலுத்துக்கொள்கிறாளா? அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்'' என்றார்.



அசைவ விரும்பிகள் ஏன் சைவ விலங்குகளை சாப்பிடுகின்றன?

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, மாஸ்கோ சென்றிருந்தார். அவர், கம்யூனிச எதிர்ப்பாளர். ரஷ்ய அதிபராக இருந்த பிரஷ்னேவுக்கும், தேசாய்க்கும் இடையே விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லை. ''நான் சந்தோஷமான நேரங்களில் விருந்தினருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவேன். ஆனால், உங்களுடன் டீ மட்டும்தான் குடிக்கலாமென தோன்றுகிறது '' என்றார் பிரஷ்னேவ். அதற்கு,''நான் டீ குடிப்பதை விட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன'' என்றார் தேசாய்.  பிரஷ்னேவ் விடவில்லை. ''சரி, நாம் சாப்பிடலாம். நான் அசைவம், நீங்கள்?'' என்று கேட்டார். '' நான் சைவம். அசைவ விரும்பிகள் ஏன் சைவ விலங்குகளை சாப்பிடுகிறீர்கள் என்றுதான் எனக்கு தெரியவில்லை'' என்றார் தேசாய், கிண்டலாக. பிரஷ்னேவுக்கு கடுங்கோபம் என்றாலும், தேசாயின் மதிநுட்பத்தை ஆச்சரியத்துடன் ரசித்தார். 


படித்து விடுகிறேனே..

அறிஞர் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறித்தும், அவர் தேதியைத் தள்ளி வைக்கச் சொன்னார். 'பகுத்தறிவுவாதியான அண்ணா, நாள் நட்சத்திரம் பார்க்கிறாரே?' என்று பலரும் யோசித்தனர். ''நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். 'ஆபரேஷன்' தேதிக்குள் படித்து முடிக்க முடியாது. படித்து முடித்துவிட்டு திருப்தியாக ஆபரேஷனுக்கு போகலாம் என்பதே என் விருப்பம்'' என்றார், அண்ணா.  

நானும் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்

சர்ச்சில், இங்கிலாந்து பிரதமராக இருந்த நேரம். மனநல மருத்துவமனை ஒன்றை பார்வையிட சென்றார். அப்போது மனநோயாளி ஒருவர், நீங்கள் யார் என்று சர்ச்சிலைப்பார்த்து கேட்டார். ''நான் பிரதமர்'' என்றார் சர்ச்சில். அதைக்கேட்டதும் அந்த மனநோயாளி பலமாக சிரித்தார். ''இங்கே வந்த புதிதில் நானும் இப்படித்தான் பிரதமர், ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். போகப்போக குணமாகிவிடும்'' என்றார். அதைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டார் சர்ச்சில். 

இதுதான் சுகாதாரமானது

இங்கிலாந்து நாட்டின் பெரும் தலைவரான சர்ச்சிலும், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்துக்குச் சென்றனர். சர்ச்சில் ஸ்பூனால் சாப்பிட்டார். ராதாகிருஷ்ணன் கைகளை சுத்தமாக கழுவிய பின்னர் சாப்பிட அமர்ந்தார். கையால் சாப்பிட்டார். இதனை கவனித்த சர்ச்சில், ''என்ன இது.. ஸ்பூனால் சாப்பிடுவது தான் சுகாதாரமானது. கையால் சாப்பிடுவது தவறு'' என்றார். அதற்கு ராதாகிருஷ்ணன், ''உலகத்திலேயே கையால் சாப்பிடுவதுதான் சுகாதாரமானது.. காரணம் இதை வேறு யாரும் உபயோகப்படுத்த முடியாதே'' என்றார். 

உபதேசம்

புத்தரின் சீடன், ஒரு பிச்சைக்காரனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அதை அவன் காதில் வாங்கவில்லை. சீடனுக்கு கோபம் வந்தது. புத்தரிடம் போய் சொன்னான். ''அந்த பிச்சைக்காரனை என்னிடம் அழைத்துவா'' என்றார் புத்தர். அவ்வாறே செய்தான் சீடன். பிச்சைக்காரனைப் பார்த்தார், புத்தர். உடல் மெலிந்து, பல நாளாகப் பட்டினி கிடந்து பசியோடு காணப்பட்டான். புத்தர், அவனுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்தார். பின்பு, ''நீ போகலாம்'' என்று அனுப்பிவிட்டார். சீடனுக்குப் பொறுக்கவில்லை. ''நீங்கள் அவனுக்கு உணவு மட்டும்தானே அளித்தீர்கள். உபதேசம் ஏதும் செய்யவில்லையே?'' என்று கேட்டான். ''இன்று அவனுக்கு உணவுதான் உபதேசம். இதுவே அவனுக்கு இப்போது முதல் தேவை. அவன் உயிரோடு இருந்தால்தான் நாளை உபதேசத்தைக் கேட்பான். பசித்தவனுக்கு என்ன சொன்னாலும் பயன்படாது '' என்றார். 

காரணத்தைத் தெரிந்துகொள்வார்கள்

தத்துவமேதை பெர்னார்ட்ஷா ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பார். ஒருநாள் தன் குண்டான நண்பருடன் வெளியில் சென்றார். அப்போது அந்த நண்பர், பெர்னார்ட்ஷாவைப் பார்த்து, ''உங்களை யாராவது பார்த்தால், இங்கிலாந்தில் ஏதோ உணவுப் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள்!'' என்று கிண்டலடித்தார். இதைக்கேட்டு சிரித்த பெர்னார்ட்ஷா, ''ஆமாம், ஆனால், உங்களையும் பார்த்தால், இந்த பஞ்சம் ஏற்பட்டதன் காரணத்தைத் தெரிந்துகொள்வார்கள்'' என்றார். கிண்டலடித்த நண்பர் வாயை திறக்கவில்லை. 

1 comment:

  1. சுவையான செய்திகள்.... தொகுத்து வழங்கிய உங்களுக்கு ஒரு பூங்கொத்து.....

    ReplyDelete