Friday 17 February 2012

காதலர் தினம்





            புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நிகராக இந்த ஆண்டும் 'காதலர் தினம்' உற்சாகமாக கொண்டாடப்பட்டுவிட்டது. பத்திரிகைகள் காதல் சிறப்பிதழ்களை வெளியிட்டும், தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும் தங்கள் பங்குக்கு காதலர்களை உற்சாகப்படுத்தினர். 

         கடற்கரை, பூங்கா போன்ற காதல்தேசங்களில் வழக்கத்தைவிட பல மடங்கு கூட்டம் அதிகரித்ததாக கேள்வி. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்கள் போன்று கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அன்றைய தினம் இரவு, காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகளில் சொன்னார்கள். 

            காதல் தோல்வியால், சிலர் தற்கொலை செய்துகொண்டதாக அடுத்த நாள் செய்தித்தாள்களில் பார்க்க முடிந்தது. 

          காதலர் தின வேடிக்கையாக, வழக்கம் போல ஒரு கோஷ்டி கிளம்பி, நாய்களுக்கு திருமணம், நாய்க்கும், கழுதைக்கும் திருமணம், சமயத்தில் காதலர்களுக்கே கூட கட்டாய திருமணம் என்று காமெடி கலாட்டாக்கள் நடத்தியதையும் பார்க்க முடிந்தது. நியாயமாக, இவர்கள், காதலை வைத்து வியாபாரம் செய்யும் ஊடகங்கள் மற்றும் சினிமாக்காரர்களுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்த வேண்டும். காதலர்களுக்கு எதிராகவோ, காதலுக்கு எதிராகவோ அல்ல. ( இவர்கள் அடிக்கும் கூத்தில், நாயும், கழுதையும் சிக்கி அவஸ்தை படுவது பரிதாபம்) 
    
            பால் குடிக்கும் குழந்தை தொடங்கி, பல்போன கிழடுகளின் காதல்வரை சினிமாக்காரர்கள் காதல் சினிமாக்களை சகட்டுமேனிக்கு எடுத்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கருவில் இருக்கும் குழந்தைகள் காதலிப்பது போலத்தான் படம் வரவில்லை. (ஒருவேளை அப்படியும் படம் வந்து, நான் பார்க்காமல் இருக்கலாம்). காதல் என்பது, தமிழ் சினிமாவின் சுவாசம் மாதிரி. இந்த அக்கப்போரில், சிக்கி சின்னாபின்னப்படுவது என்னவோ, அந்த கண்றாவி சினிமாக்களைப் பார்க்கும் ரெண்டுங்கெட்டான் வயது பிள்ளைகள். காந்திமண்டபத்திற்கு ஒரு நடை போனால், அங்குள்ள புதர்களில், பள்ளி யூனிபார்ம் போட்ட காதலர்களை சர்வ சாதாரணமாக பார்த்து தலையிலடித்துக் கொண்டு வரலாம் (நம்முடைய தலையிலதாங்க). 


No comments:

Post a Comment