Saturday 11 February 2012

ஆகவே..


   சிரியை படுகொலை சம்பவத்திற்கு அடுத்தபடியாக மனதை பதற வைத்த செய்தி, தோழியை நான்கு நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து கொடூரமாக கற்பழித்த சம்பவம். இப்போது, நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கால்வாசி காரணம் குடிபோதை.  

                 கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லா எழவுக்கும் இப்போது குடித்து கொண்டாடுவது நாகரீகமாகிவிட்டது. மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வருவதாக எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் வருத்தப்பட்டார். கடந்த மாதம், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மீசை கூட அரும்பாத இளவட்டங்கள், கையில் மது பாட்டிலோடு நடுராத்திரியில் திரிந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஒரு நாளைக்கு இரண்டு தடவை மட்டுமே, அதுவும் கூட்டம் சேர்ந்தால் மட்டுமே பேருந்து வந்து போகிற எங்கள் கிராமத்திற்குள்ளும் மதுக்கடை முளைத்துவிட்டது. அரசாங்கம், தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, குடிகாரர்களை ஊக்கப்படுத்துகிறது. மதுக்கடை வாசலில் நின்று முட்ட குடித்துவிட்டு, வருவோர் போவோரை வம்பிழுப்பதில் தொடங்கி, மேற்படி செய்திவரை உருவாகும் பிரச்னைகள் ஏராளம். பல பெண்களின் தாலியை அறுத்துவிட்டு, தாலிக்கு தங்கம் தருவது அரசின் கடமையாகிவிட்டது. 

                கொண்டாட்டங்கள் தவிர, குடிப்பதற்கு நம்மவர்கள் சில விநோதமான காரணங்களைச் சொல்கின்றனர். கவலைகளை மறக்க, மனத்தெம்புக்காக, கலவி இன்பத்தை அதிகரிப்பதற்காக, ஏன் மது ஒரு சத்தான உணவுப் பொருள் என்று வாதிடும் அறிவாளிகளும் உண்டு. ஆனால், மது மனித உடலுக்கு எவ்வித நன்மைகளையும் செய்வதில்லை. 

         இது ஒருபக்கம் இருக்க, கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கள்ளச் சாராயத்திற்கு 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 'டாஸ்மாக்' சரக்கு விலையெல்லாம் கட்டுப்படியாகாத கிராம மக்களின் தேர்வு, கள்ளத்தனமாய் காய்ச்சி விற்கப்படும் கள்ளச்சாராயம். இது ஒருவகையில் விஷம். 

             பொதுவாக, எல்லா மதுவகைகளிலும் 'ஆல்கஹால்' கலந்திருக்கும். இது. 'ஈதைல் ஆல்கஹால்' என்று அழைக்கப்படும். 'எத்னால்' என்ற பெயரும் உண்டு. இது, நிறமற்ற, கடுமையான எரிச்சல் சுவையுடைய, விரைவில் ஆவியாகக் கூடிய திரவம். 'புளிக்க வைத்தல்' மூலம் இது பெறப்படுகிறது. 
கரும்பு, தேன், பழவகைகள், தானியங்கள் ஆகியவை ஈஸ்ட்டுடன் கலக்கும் போது, ஒரு என்சைம் உண்டாகிறது. இந்த என்சைம் மேற்கண்ட பொருட்களில் உள்ள சர்க்கரையை கரியமில வாயுவாகவும், ஆல்கஹாலாகவும் மாற்றுகிறது. 

       நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் ஜீரணமாகி, சத்துப்பொருட்கள் ரத்தத்தில் கலக்கின்றன. ஆனால், ஆல்கஹால் ஜீரணிப்பதில்லை. மெலிதான இரப்பை மற்றும் குடல் சுவர்கள் வழியாக ஆல்கஹால் மிக எளிதாக ஊடுருவி நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. இவ்வாறு கலந்த ஆல்கஹால் உடல் முழுவதும் சுற்றி, மூளை, இதயம், கல்லீரல் ஆகியவற்றை அடைந்து கல்லீரலில் எரிமாற்றம் அடைகிறது. 

      இந்த வகையான சாராயம் அருந்தும்போது, ஈதைல் ஆல்கஹால் மூளையின் ஒரு பகுதியான 'பெரிபெல்லத்தை' பாதிக்கிறது. இதன் காரணமாக மூளை குழப்பம் அடைகிறது. மேலும், மனிதனை நிலைநிறுத்தக் கூடிய, காதில் அமைந்துள்ள 'பாலன்சிங்' உறுப்பை நிலைகுலைய வைக்கிறது. இதனால்தான் சாராயம் குடித்தவர் நிலைதடுமாறுகிறார். இந்த தடுமாற்றத்தையே அவர், போதையாக உணருகிறார். 

            சாரயத்தில் போதையை அதிகரிப்பதற்காக ஈதைல் ஆல்கஹாலுக்கு பதிலாக மெத்னால் எனப்படும் மீதேல் ஆல்கஹாலை சாராயத்தோடு கலக்கிறார்கள். இந்த மெத்னால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப்பொருளாகும். இந்த பொருள் ரத்தத்தில் கலந்ததும், மனித ரத்தத்தின் மிக முக்கியப் பொருளான 'ஹீமோகுளோபின்' எனப்படும் உயிர்ச் சத்தை அழிக்கிறது. (உடலுக்குத் தேவையான பிராணவாயு மற்றும் சத்துப் பொருட்களை செல்லுக்கு வழங்குவது ஹீமோகுளோபினின் முக்கியப் பணி.)  ஹீமோகுளோபின் அழிக்கப்படுவதால்,  செல்கள் பிராண வாயுவும், சத்துப்பொருட்களும் கிடைக்காமல் மெல்ல செயல் இழக்கின்றன. இதனால், மூளைக்குப் போகவேண்டிய பிராணவாயு தடைபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு, பின்னர் மரணம் நேரிடுகிறது. 

        அதைத் தவிரவும், மெத்னால், கண்களின் நரம்பு மண்டலங்களையும்  செயல் இழக்கச் செய்கின்றன. இதனால், விஷச் சாராயம் குடித்தவர்கள், தெய்வாதீனமாக பிழைத்துக்கொண்டாலும், பார்வை இழப்பை தடுக்க முடியாது. 

                         ஆகவே... நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ? 

5 comments:

  1. யப்பா தாஸு! டாஸ்மாக்கி்ல சரக்கு வாங்கி, பக்கத்து பெட்டிக் கடையில் டம்ளரும் ஊறுகாயும் வாங்கி ரோட்டோரத்திலேயே தயங்காமல் குடிக்கின்றனர். குடிகாரன் என்பது அவமானம் என்ற காலம் போய் அரசாங்கமே அதை சகஜமாக்கிடுச்சு. இப்ப இவ்வளவு பெரிய சங்கை நீ ஊதி என்னப்பா பிரயோஜனம்? ஹும்ம்ம்ம்! இப்படி பெருமூச்சு விடத்தான் முடியுது? வேறென்ன செய்ய...

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு நண்பரே...

    குடிப்பதற்காகவே எவ்வளவு செலவு செய்கிறார்கள்... குடிக்காக எதை வேண்டுமானாலும் இழக்கத்தயாராக இருக்கிறார்கள்... என்ன சொல்வது. என்று திருந்துவார்களோ....

    Word Verification எடுத்து விடுங்கள். கருத்துரை இடுபவர்களுக்கு அது தொந்தரவாக இருக்கும்...

    ReplyDelete
  4. நல்ல விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துகள்.

    ReplyDelete