Sunday 26 February 2012

ஒரு காதல் கதை






            புதிதாக செய்த புத்தக அலமாரியில், என்னிடமிருந்த புத்தகக் கட்டுக்களை பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தபோது, என் நண்பன் கொடுத்த கவிதை நோட்டு கையில் சிக்கியது. கிப்ட் பேக் செய்யும் காகிததத்தால், அட்டைப் போடப்பட்டுள்ள அந்த நோட்டு முழுவதும் அவனே எழுதிய காதல் கவிதைகள். சந்தோஷம், துக்கம், விரக்தி, கோபம், வெறுப்பு என பல்வேறு உணர்வுகளை கொண்டவை. அனுபவித்து எழுதப்பட்டவை. நாங்கள் இருவரும் பள்ளிக்கூட காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அவன் பெங்களூருவாசியாகிவிட்ட பின்னர், சில ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்த அவன் காதல் கதையை இரவு முழுவதும் தூங்காமல் சொல்லிக்கொண்டிருந்தான். நானும் கொட்டாவி விட்டபடியே கேட்டுக்கொண்டேன். இரவு முழுவதும் அவன் சொன்னதன் சாராம்சம், அவனை காதலிப்பதாக உசுப்பேற்றிய பெண், பின்னர் ஏனோ அவனை விட்டு விலகிப்போகத் தொடங்கிவிட்டாள் என்பதே. 
அவனுக்கு என்னால் முடிந்த அல்லது தெரிந்த  அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லி அனுப்பி வைத்தேன். 

      அவனது அம்மா சிறுவயதிலேயே தவறிவிட்டார். ஒரு தங்கை உண்டு. வழக்கம்போல, குழந்தைகளை கவனிப்பதற்காக என்று இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட அவனது தந்தை, அவர்களை கவனிக்காமலேயே தனிக்குடித்தனம் போய்விட்டார். பாட்டி வீட்டில் வளர்ந்த அவன், சிறுக சிறுக சேமித்து, ஒரே தங்கைக்கு திருமணம் செய்து வைத்தான். மகளின் திருமணத்திற்கே, அந்த தந்தை வரவில்லை என்பது தனிக்கதை. வாழ்நாள் முழுவதும் அன்புக்காக ஏங்கியவன் அவன். அவன் பேச்சில் இந்த ஏக்கம் எப்போதும் தொனித்துக்கொண்டே இருக்கும். 

      அடுத்த முறை நேரில் சந்தித்தபோது, அவனது காதலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால், அந்த பெண்ணை நினைத்து உருகி, உருகி எழுதிய கவிதைகள் அடங்கிய கவிதை நோட்டை என்னிடம் கொடுத்து, 'இதை படிச்சாதான் என்னோட வலி உனக்கு புரியும்டா' என்றான். அந்த நோட்டை பத்திரமாக வைத்திருந்து கேட்கும் போது கொடுக்கச் சொல்லியும் உத்தரவிட்டான். அந்த சந்திப்பின்போது, வேறு முகவரிக்கு மாறப்போவதாகவும், மாறிய பின்னர், புதிய விலாசமும், போன் நம்பரும் தெரிவிப்பதாக கூறிச்சென்றான். ஆனால், அதன்பிறகு அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அதன்பிறகு, சில ஆண்டுகளாக அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது உள்ளது போல செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லை. ஒரு இன்கமிங் காலுக்கு 3 ரூபாய் என்று ஞாபகம். எங்கள் தகவல் தொடர்பு எல்லாம் கடிதம் மூலம் மட்டுமே.  எப்போதாவது தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.  

இந்த இடைவெளியில், அவனது கவிதைகள் சிலவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை அவனது பெயரிலேயே பிரசுரமாகின. (அவ்வப்போது எனது கவிதைகளும் பத்திரிகைகளில் வரும். அதை படித்துவிட்டு பாராட்டும் ஒரே ஜீவன் அவன்தான்). அடுத்த முறை பார்க்கும் போது, பத்திரிகைகளில் பிரசுரமான அவனது கவிதைகளை பைண்ட் செய்து அவனுக்கு பரிசளித்து, இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்பது எனது எண்ணம். 

       வேறு நண்பர்கள் மூலம் அவனை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவே இல்லை. நான் எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு மதிய நேரத்தில், செல்போனில் அழைத்த வேறொரு நண்பன் ஒரு செய்தியைச் சொன்னான். 'நம்ம சூசை இறந்துட்டான்டா' சம்மட்டியால் நடுமண்டையில் அடித்ததுபோல இருந்தது அந்த செய்தி. சில நிமிடங்களுக்கு வார்த்தைகள் வரவில்லை. என்னால், நம்பவும் முடியவில்லை.  பின்னர், நிதானித்துக்கொண்டு, விசாரித்தபோது, காதல் விவகாரத்தில் உயிரை இழந்தது தெரியவந்தது. கடைசிவரை அன்புக்காக ஏங்கியே உயிரைவிட்ட ஜீவன். 

        காதல் அடங்கிய நோட்டு இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதை ஒப்படைப்பதற்குத்தான் அவன் இல்லை. 









6 comments:

  1. மனதை நெகிழ வைக்கும் அருமையான பதிவு.

    ReplyDelete
  2. அடடா.... மனதை நெகிழ வைத்தது....

    நல்ல பகிர்வு நண்பரே....

    ReplyDelete
  3. யார் யாரோ எல்லாம் பத்திரிகை அனுபவங்கள் எழுதும் பொது
    நீங்களும் எழுதலாமே?
    பிரபு

    ReplyDelete
  4. யார் யாரோ எல்லாம் பத்திரிகை அனுபவங்கள் எழுதும் பொது
    நீங்களும் எழுதலாமே?
    பிரபு

    ReplyDelete