Sunday 23 July 2017

ஜிகா ஜூரம்


   சிக்குன்குன்யா, டெங்கு, வரிசையில் லேட்டஸ் அச்சுறுத்தல் ஜிகா. ‘தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரியில் ஒருவர் ஜிகா காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார், இன்னும் நான்கு பேருக்கு அதே அறிகுறிகள்... என்றெல்லாம் பீதி கிளப்புகின்றன பிரேக்கிங் நியூஸ்கள். ஜிகாவின் சரித்திரம் தெரியுமா?
      
     1947-ம் ஆண்டு, முதன்முதலாக உகாண்டா நாட்டில் இருக்கும் ஜிகா காடுகளில் வாழும் ரீஸஸ் குரங்குகளுக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜிகா காடுகளில், இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால், ‘ஜிகா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அந்த வைரஸ் மனிதர்களுக்குள்ளும் ஊடுருவி, ஆப்பிரிக்கா நாடுகளில் பல்கிப் பெருகியிருந்த து 1952-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஜிகா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு தனது எல்லைகளை விஸ்தரித்து ஜிகா. தற்போது, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நோய்த் தாக்கம் ஏற்பட்டபோதுதான் ஜிகா பரவலான கவனம் பெற்றது.

  காய்ச்சல், தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள், தசைகளிலும் மூட்டுகளிலும் வலி, உடல் சோர்வு, கண் சிவத்தல், தலைவலி போன்றவை ஜிகா தாக்குதலின் அறிகுறிகள். டெங்கு நோயின் அறிகுறிகளும் ஜிகாவுக்கான அறிகுறிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை.  

  ஜிகா கர்ப்பிணிகளுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிகளை ஜிகா வைரஸ் தாக்கும்போது, கருவிலிருக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது.  சிறிய தலையுடனும், (Microcephaly), மனவளச்சி குன்றிய நிலையிலும் குழந்தைகள் பிறக்கும் என்றும் எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.  கில்லியன் - பேர் சிண்ட்ரோம் (Guillain – Barre syndrome) எனும் நரம்பியல் சார்ந்த நோயையும் ஜிகா வைரஸ் ஏற்படுத்துகிறது. 2015-ம் ஆண்டு, பிரேசிலில் ஜிகா வைரஸ் பரவியபோது,  குழந்தை பெறுவதை தள்ளிப்போடும்படி பெண்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.   

   சிக்குன்குன்யா நோய்களைப் பரப்பும் அதே ஏடிஸ் (Aedesகொசுக்கள்தான் ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. எனவே, கொசுக்களை நெருங்க விடாமல் செய்வதுதான் ஜிகாவை தடுப்பதற்கான முதன்மை மற்றும் முக்கியமான வழி. சத்துள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அடுத்த வழி. சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுவது சிறந்த வழி.
   
   ரத்தம் செலுத்துதல் மூலமாகவும், உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் கிருமி பரவும் என்பது கூடுதல் தகவல். எனவே, நோய் வந்தபின் வருந்துவதை விட, வருமுன் காப்பதே சாலச் சிறந்த்து என சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?


No comments:

Post a Comment