Saturday 25 April 2015

இந்தியாவுக்கு 117-வது இடம்

எதில் என்கிறீர்களா? உலகிலேயே மகிழ்ச்சியான 158 நாடுகள் பட்டியலில்தான் இந்த இடம்.

உலகிலேயே மகிழ்ச்சியான 158 நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தான் மிகவும் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐநாவின் கீழ் இயங்கும் சஸ்டெய்னபில் டெவலப்மென்ட் சொலிஷன் நெட்வொர்க் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் ஆயுட்காலம், சமூக ஆதரவு மற்றும் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதற்கான ஆய்வு நடத்தப்படுகிறது. 
கடந்தாண்டுக்கான ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. டாப் - 5 இடங்களை  ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா நாடுகள் பிடித்துள்ளன. 
அமெரிக்கா 15வது இடத்திலும், இங்கிலாந்து 21 வது இடத்திலும், சிங்கப்பூர் 24வது இடத்திலும், சவுதி அரேபியா 35வது இடத்திலும், ஜப்பான் 46 வது இடத்திலும், சீனா 84வது இடத்திலும் உள்ளன.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 113வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடங்கள் பின்தங்கியுள்ளது.

பாகிஸ்தான் - 81 வது இடத்திலும், பாலஸ்தீனம் - 108 வது இடத்திலும், வங்கதேசம் - 109 வது இடத்திலும்,  உக்ரைன் -111 வது இடத்திலும், ஈராக் - 112 இடத்திலும் உள்ளன.

ஆப்கானிஸ்தான், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஆப்ரிக்க நாடுகளான டோகோ, புருண்டி, பெனின், ரிவாண்டா, புர்கினா, பாஸோ, ஐவரி கோஸ்ட், கினியா மற்றும் சாட் ஆகிய 10 நாடுகள் மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment