Thursday 9 April 2015

ஜெயகாந்தன்


தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரவலான சமூக அடையாளத்தை அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த முன்னோடி ஜெயகாந்தன். வாசகனின் வாசகியின் அறிவில் நம்பிக்கை வைத்து அவர்களிடம் நட்புணர்ச்சியோடு எழுதியவர். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர்.  - பத்திரிகையாளர் ஞானி

அவர் ஒரு கர்வி என்று என்னிடம் சிலர் சொல்லும்போது.. 'இருக்கட்டுமே..அசாத்திய படைப்புகளைப் பிரசவிக்க அந்த குணம் அவருக்கு தூண்டுதலாக இருந்தால் அது சமூகத்திற்கு நல்லதுதானே' என்பேன். - எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்


'நான் இனிமேல் எழுதப் போவதில்லை' என்று ஜெ.கே. அறிவித்தார். சுமார் கால் நூற்றாண்டுகளாக எந்தப் படைப்பிலக்கிலத்தையும் அவர் செய்யவில்லை. ஆனாலும் தமிழ் எழுத்தாளர்களின் அடையாளமாக இன்றுவரை அவர்தான் இருந்தார்... இருக்கிறார். - எழுத்தாளர் தமிழ்மகன்


விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை ஊடுருவிச் சென்றது போலவே உயர் வகுப்பினரின் வாழ்வியல் போராட்டங்களுக்குள்ளும் அதே உக்கிரத்துடன் தன் படைப்பு மொழியை செலுத்தியவர். துணிச்சலாக எழுதியது போலவே அதே துணிச்சலுடன் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டவர். - கவிஞர் மனுஷ்யபுத்திரன்

ஒரு முறை அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்... ''பாரதி... பாரதிக்குப் பிறகு? புதுமைப்பித்தன் ! புதுமைப்பித்தனுக்குப் பிறகு? நான்!'' அவர் இன்று இல்லை... அந்தக் குரல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்... அது... சத்தியத்தின் குரல்! - கவிஞர் பழனி பாரதி


ஜெகே மறைவு இரு ஆளுமைகளையும் எண்ணத்தூண்டுகிறது. நூல்களில் நானறிந்த ஜெகே இருப்பார். நேரில் நானறிந்த ஜெகே நினைவுகளாக இருப்பார். வலக்கையால் மீசையை நீவியபடி ஒரு புதிய எண்ணம் வரும்போது உருவாகும் தோள்பொங்குதலுடன் "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர். ஓச்சின்னா என்ன? சுழற்றுதல். மெல்லச்சுழற்றி எறியணும். யானை கல்லை விட்டெறிவதை பார்த்திருக்கிறீர்களா? மென்மையா பூவை போடுவதுபோல எறியும். ஏன்னா அரசன் யாரு? அவன் யானை. அவன் அப்படித்தான் செய்யவேண்டும்" என்று எழுந்தெழுந்துபோகும் அவரது குரலை நினைத்துக்கொள்கிறேன்.
இன்று வேறேதும் செய்யப்போவதில்லை. ஜெகே மட்டும்தான். - எழுத்தாளர் ஜெயமோகன்


ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம், அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல; அவர் எழுத்துக்களே ஞானபீடம்தான். சூரிய வெளிச்சம்கூட எட்டிப் பார்த்திராத வாழ்க்கையை தன் கலைக்கண்களால் பார்த்துப் பதிவு செய்தவர்; விளிம்புநிலை மனிதர்களை உலக இலக்கியக் கதாபாத்திரங்களாய் உலவச் செய்தவர் ஜெயகாந்தன். - கவிஞர் வைரமுத்து


தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர் தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜெ.கே. தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் புதிய படைப்பாளிகளின் கலங்கரை இலக்கியத்திற்கும், தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்க முடியாதது. - இசையமைப்பாளர் இளையராஜா


ஒரு ஆளுமையாக ஜெயகாந்தனை எனக்கு பிடிக்கும். கர்வமாக ஒரு நிஜ கலைஞன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயகாந்தன். தான் விரும்பிய வாழ்க்கையை மிக சந்தோசமாக நிதானமாக அழகாக வாழ்ந்து மடிந்தான் ஒரு எழுத்து கலைஞன்....
- திரைப்பட இயக்குநர் வசந்தபாலன்

தமிழின் உயிர் எழுத்துக்களில் ஒன்று தன் உயிரை உதிர்த்துவிட்டு இனி எழுத்தாக மட்டுமே வாழும். எழுதுபவனையெல்லாம் எழுத்தாளன் எனத் (தானே) அழைப்பதுண்டு.
ஆனால் தன் எழுத்தின் மூலம் தமிழையே ஆள்பவனை, தனித்துவ ஆளுமையின் மூலம் சமூகத்தில் தன் சுவடு பதித்தவனை என்னவென அழைப்பது? சீரிய சிந்தனைகள் மூலம் சீறிய சிங்கம் ஜெயகாந்தன்! - நடிகர், இயக்குநர் பார்த்திபன் 

No comments:

Post a Comment