Monday 27 April 2015

தெரியுமா இவரை - 12 நெப்போலியன்.

உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ள மாவீரர்கள் பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் நெப்போலியனுக்கு என்றுமே தனியிடம் உண்டு. கார்சிகா தீவில் 1769-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நெப்போலியன் போனபார்ட் பிறந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர். ராணுவ பள்ளியில் கல்வி பயின்ற நெப்போலியன், படிப்பில் ரொம்பவும் சுமார். ஒரு வழியாக படிப்பை முடிந்தபின், ராணுவத்தில் சேர்ந்தார் நெப்போலியன். தனது திறமையால், 1785-ம் ஆண்டு ராணுவ துணைத் தலைவராக உயர்ந்தார். 

1796-ம் ஆண்டு ஆஸ்திரியாவுக்குச் சொந்தமான இத்தாலியப் பகுதிகளை பிடிப்பதற்காக ராணுவம் நெப்போலியனை அனுப்பியது. வீரம், ராஜ தந்திரம், புதிய போர் முறைகள் இவற்றால், அவருக்கு வெற்றி எளிதாக கிட்டியது. பிரெஞ்சு மக்களின் உள்ளம் கவர்ந்த ஹீரோவானார் நெப்போலியன். பின்னர், அவரது பார்வை இங்கிலாந்து நோக்கித் திரும்பியது. கீழை நாடுகளுடன் இங்கிலாந்து கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை துண்டிக்கும் நோக்கத்துடன், எகிப்து மீது படையெடுத்தார். நைல் நதிக்கரையில் 1798-ம் ஆண்டு நடைபெற்ற இந்த போரில், நெப்போலியன் வெற்றியைத் தவறவிட்டார். 

இதற்கிடையில், பிரான்சில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. நாடு திரும்பிய நெப்போலியன், ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினார். பிரெஞ்சு புரட்சிகளால் சோர்ந்துபோயிருந்த அந்நாட்டு மக்கள், நெப்போலியன் மூலம் நல்லாட்சி கிடைக்கும் என்று நம்பினர். எனவே, மக்களின் பேராதரவுடன், 1804-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் சக்ரவத்தியானார் நெப்போலியன். ஆனாலும், தனது ராஜ்ஜியத்தை அவர் விரிவு படுத்த விரும்பினார். முக்கியமாக இங்கிலாந்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பினார். எனவே, 1805-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் துணையுடன் இங்கிலாந்து மீது படையெடுத்தார். டிரபால்கர் என்ற இடத்தில் நடைபெற்ற போலில் நெப்போலியன் தோற்றார். ஆனாலும், இங்கிலாந்தின் நேச நாடுகளான ஆஸ்திரியா, பிரஷ்யா, ரஷியா ஆகிய நாடுகளை அவர் கைப்பற்றினார். பின்னர், 1806-ம் ஆண்டில் ஈடு இணையற்ற சக்ரவர்த்தி என்று பட்டம் சூட்டிக்கொண்டார். 

நெப்போலியனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜோசபின். இவர் ஏற்கனவே திருமணமானவர். ராணுவ அதிகாரியான அவரது கணவர், பிரெஞ்சு புரட்சியின் போது கொல்லப்பட்டார். விதவையான ஜோசபினை நெப்போலியன் காதலித்து மணந்தார். திருமணத்தின் போது நெப்போலியனுக்கு 27 வயது. அவரை விட ஜோசிபின் 6 வயது மூத்தவர். ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக, நெப்போலியன் பின்னர், ஜோசபினை விவாகரத்து செய்துவிட்டு, ஆஸ்திரிய நாட்டு இளவரசியான மாரி லூயி என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1811-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு இரண்டாம் நெப்போலியன் என்று பெயரிட்டனர். 

ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நெப்போலியன் செய்த முயற்சிகள் அந்த நாடுகளில் நெப்போலியனுக்கு எதிர்ப்பை உண்டாக்கின. ஒப்பந்தப்படி நடக்கத் தவறியதால், ரஷியா மீது 1812-ம் ஆண்டு நெப்போலியன் மீண்டும் படையெடுத்தார். ஆனால், இதில், அவர் பெருந்தோல்வியைத் தழுவினார். ரஷியாவுக்குச் சென்ற நான்கரை லட்சம் பிரான்ஸ் நாட்டு வீரர்களில், 20 ஆயிரம் பேர் மட்டுமே உயிருடன் திரும்பினர். இந்த தோல்வி, நெப்போலியனை ஆட்டம் காணச் செய்தது. பதுங்கியிருந்த ஐரோப்பிய நாடுகள் அவரை எதிர்க்கத் துணிந்தன. இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷியா, பிரஷ்யா ஆகிய நாடுகள் பிரான்ஸ் மீது படையெடுத்தன. 1814-ம் ஆண்டு நடைபெற்ற போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு, எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். எனினும், அங்கிருந்த தப்பிய அவர், மறுபடியும் படை திரட்டி போருக்குத் தயாரானார். 

1815-ம் ஆண்டு வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியனின் படைகளும், இங்கிலாந்து படைகளும் சந்தித்து கடும் போர் புரிந்தன. இதிலும், நெப்போலியனுக்குத் தோல்வியே கிட்டியது. பாரிஸ் நகருக்குத் திரும்பிய நெப்போலியன், பதவி விலக, போசிடி என்பவன் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னர், கப்பல் மூலம் நெப்போலியன் நாட்டை விட்டு வெளியேற முயன்றார். அப்போது, பிளிமத் துறைமுகத்தில் நெப்போலியனை கைது செய்த இங்கிலாந்து ராணுவம், அவரை ஹெலீனா என்ற தீவில் சிறை வைத்தது. 15 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட சிறிய தீவில், சுகாதாரமற்ற வீட்டில் அவர் காவலில் வைக்கப்பட்டார். புத்தகங்கள் படிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்த நெப்போலியன், உடல் நலம் குன்றி, 1821-ம் ஆண்டு மே 15-ம் தேதி தமது 52 வது வயதில் மரணமடைந்தார். ஹெலீனா தீவிலேயே அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 


No comments:

Post a Comment