Monday 20 April 2015

தெரியுமா இவரை - 11 பெஞ்சமின் ஃபிராங்களின்

'இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; சிறந்த படைப்புகளை உருவாக்குங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு அர்த்தமுள்ள வகையில் வாழுங்கள்' என்றவர் பெஞ்சமின் ஃபிராங்களின். சொன்னதோடு நிற்காமல் இரண்டு விதமாகவும் சாதனை மனிதராக வாழ்ந்து காட்டியவர் அவர். 

விஞ்ஞானி, அரசியல்வாதி, வணிகர், இலக்கியவாதி, பத்திரிகையாளர், கல்வியாளர் என பல முகங்களுடன் இயங்கிய பெஞ்சமின் ஃபிராங்கிளின், மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடி உள்பட பல்வேறு கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் பிரபலமான குடிமகன் என்றும் அழைக்கிறது வரலாறு. 

1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் ஃபிராங்கிளின். 17 பிள்ளைகளில் இவர் பத்தாவது. அவரது தந்தையார் சோப்புக் கட்டிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தயாரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓராண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார் 

புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துவிடுவார்.  வாசிப்பின் காரணமாக, சுவாரசியமாக எழுதும் திறமையும் வந்தது. பிறகு, தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா  வந்தடைந்தார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கியதால், புகழும் சேரத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு 'பென்சில்வேனியா கெசட்' என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கினார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து 'புவர் ரிச்சர்ட் அல்மனாக்' என்ற பத்திரிகையை தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த பத்திரிகை, அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்காக செயற்கை உரத்தை உருவாக்கியவரும் அவரே.

மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்த அவர் மின்னலில் கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியவர்கள் தூரப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் வெள்ளெழுத்து கண்ணாடியும் அவரது கண்டுபிடிப்புதான். தனது கண்டுபிடிப்புகள் எதற்கும் அவர் காப்புரிமை பெற்றதில்லை.


பத்திரிகைகளை சந்தா செலுத்தி, வாங்கிப் படிக்கும் முறையை அறிமுகம் செய்தவரும் ஃபிராங்க்ளின்தான். பிலடெல்பியாவின் தபால் துறையில் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.  உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான 'பென்சில்வேனியா  பல்கலைக்கழகம்' அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.

1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டென் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது. 

சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதனுக்கு அந்த தபால் தலை மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது அமெரிக்க தேசம். கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். 



No comments:

Post a Comment