Sunday 15 October 2017

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
என்கிறார் திருவள்ளுவர். ( குறள் 969 )
கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.

இந்திய காடுகளில், அதிகம் காணப்படும் விலங்குகளில், மான் இனமும் ஒன்று. சருகுமான், புள்ளி மான், குரைக்கும் மான், நான்கு கொம்பு மான், எலிமான், கடமான், ஆண்டி லோப் மான், சாம்பார் மான் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 80-க்கும் மேற்பட்ட மான் இனங்கள் உள்ளன.
இந்த மான் இனங்களைப் பற்றி நாம் படித்திருப்போம். ஆனால், கவரி மான் என்ற வகை மான் இருக்கிறதா என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஆனால், இப்படி ஒரு மான் இருப்பது குறித்த தகவல்கள் வேறு எந்த புத்தகங்களிலும் இல்லை. குழப்பமாக இருக்கிறது அல்லவா?

969- என் திருக்குறளைக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல, ‘ கவரி மா’ என்பதே சரி!  கவரி மா பேச்சு வழக்கில் கவரி மானாக மருவிவிட்டது.

கவரி மா என்று ஒரு விலங்கு உண்டு. ஆனால், அது மான் இனம் அல்ல.  
புறநானூற்றில் இந்த விலங்கு பற்றிய குறிப்பு உண்டு.
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்"

இமயமலைப் பகுதியில், கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள்.

கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் விலங்கு. மேலும், அது மாடு வகையைச் சேர்ந்த விலங்கு.  
வள்ளுவர் குறிப்பிடுவது இந்த விலங்கைத்தான்.  கவரி மா குறித்து பதிற்றுப் பத்திலும் குறிப்புகள் உள்ளன.
முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு கவரி மா. அந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய சொல் உருவானது.மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.

பனிப் பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்.
அதே போல சில மனிதர்கள். அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். என்பதே 969 எண் திருக்குறள் சொல்லும் பொருள்.

எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை.ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தவறு!


3 comments:

  1. நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. வள்ளுவர் வாழ்ந்த காலம் எது என எனக்கு தெரியாது.

    கவரி எனும் மாடு இமயத்தில் இருப்பதாக நீங்கள் விளக்கத்தில் குறிப்பிடுகிறீர்கள். அப்படி என்றால், வள்ளுவர் காலத்தில் அவருக்கு இமயத்தில் வாழ்ந்த அனைத்து உயிரினங்களை பற்றிய அறிவு அவருக்கு எப்படி கிடைத்தது?

    அவர் இமயம் வரை சென்று தங்கி வாழ்ந்து வந்தவரா?

    அல்லது ஒரு வேளை, பண்டைய தமிழகத்தில் அதாவது கடல் கொண்டு சென்ற அகன்ற தமிழர் நாட்டில் இமயத்தை ஒத்த மலையில் வாழ்ந்த 'கவரி மா'வாக இருக்குமோ?

    ஏதோ என் சிறு மூளையில் ஒரு குழப்பம்!

    ReplyDelete
    Replies
    1. உலகத்திற்கே வழிகாட்டும் வகையில் திருக்குறளை படைத்த வள்ளுவருக்கு கவரி மா குறித்து தெரிந்திருக்கலாம்தானே?
      அவர் இமயமலைக்கு சென்றிருக்கலாம்..

      Delete