Monday 9 October 2017

கொசுவுக்கு பிடிக்காத செடிகள்

கொசுவை விரட்ட வீடுகளில் வைக்கப்படும் ரசாயனம் கலந்த கொசுவர்த்தி சுருள் போன்ற பொருட்கள் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், கொசுக்களுக்கு பிடிக்காத, ஆனால், நமக்கு பயன்தரக்கூடிய சில  செடிகளை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை எளிதாக விரட்ட முடியும். அந்த செடிகள் என்னென்ன தெரியுமா?

காட்டுத்துளசி 
நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காட்டுத்துளசி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கொசுவையும், சிறு பூச்சிகளையும் விரட்டும் தன்மைகொண்டது. இதன் சாறு, பூச்சி விரட்டிக்குப் பயன்படுத்தப்படும் டீட்டைவிடப் (DEET-Diethyltoluamide) பலமடங்கு சக்தி வாய்ந்தது. காட்டுத்துளசியின் வாசம் இருக்கும் இடத்தில் கொசுக் நெருங்காது.

ஓமம் (Basil)
ஓமத்தின் விதை சமையலுக்கு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. ஓம இலைகளில் இருக்கும் வாசனை, கொசுக்களை விரட்டும். இதை வளர்க்க சின்ன மண்பாண்டம் போதும்.
புதினா
சின்ன தொட்டியில் நட்டு, ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதும். சீக்கிரம் வளர்ந்துவிடும். இதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது.

மாரிகோல்டு
கண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்தச் செடி அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. இந்தச் செடியை வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து நம்மைப் பாதுகாகாக்கலாம்; அதோடு, இந்த மாரிகோல்டு செடியால் மற்ற செடிகளுக்கும் பாதுகாப்பு. இந்தச் செடி இருக்கிற இடத்தில் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் அண்டாது.

லாவெண்டர் (Lavender)
லாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாது, அதனால்தான் கொசு கடிக்காமல் இருக்க, நாம் பூசிக்கொள்ளும் நிறைய தோல் பூச்சுக்கள், லாவெண்டர் மணத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இது வளரும். செடிகளுக்கான பொட்டிக்கில், லாவெண்டர் செடி கிடைக்கும்.

சிட்ரோசம்
ஐந்து அல்லது ஆறு அடி வரை வளரக்கூடியது சிட்ரோசம் செடி. இதன் நறுமணம் கொசுவை விரட்டப் பயன்படும், காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' (Citronella) எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கும் மெழுகை ஏற்றினாலும், அதன் வாசத்துக்குக் கொசுக்கள் அண்டாது.

கற்பூரவல்லி
சாதாரணமாக எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது. நிறைய இடமோ, பொருள் செலவோ பிடிக்காத இந்த செடியின் வாசமும், இலைச் சாறும் கொசுவுக்குப் பிடிக்காது. 10 அடி தூரம் தாண்டியும் இந்தச் செடியின் மணம் மணக்கக்கூடியது. 

ரோஸ்மேரி
அழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்தச் செடியின் மணம், கொசுவைத் தடுக்கும் அரணாகவும் செயல்படுகிறது..

செவ்வந்தி
இந்த பூச்செடியும் சிறந்த பூச்சிவிரட்டி. பயிர்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க, இந்த செடியை ஓரங்களில் நட்டு வைத்தால், பயிர்கள் பாதுகாக்கப்படும். கொசுக்களுக்கும் இந்த செடி எதிரி. இதேபோன்று கற்றாழை செடியும் வளர்க்கலாம்.

இதைத் தவிர, இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட மேலும் சில வழிகளும் உள்ளன.

✍  கற்பூரவல்லி இலைச் சாற்றை சோற்றுக் கற்றாழைச் சாற்றுடன் சேர்த்து தண்ணீரில் கலந்து பாட்டிலில் ஊற்றி, வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசு வராது. 

✍  புகைப் போடுதல் மிகவும் பழமையான முறை. யூகலிப்டஸ் இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து புகை போடலாம். வேப்ப இலை, நொச்சி இலைகளை நெருப்புக் கங்குகளில் போட்டுப் புகை போடலாம். கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்துப் புகை போடலாம். ஆஸ்துமா நோயாளிகள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் புகை போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

✍  வேப்பிலை, நொச்சி, ஆடாதொடைகுப்பைமேனி ஆகியவற்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சினால் பச்சிலைத் தைலம் கிடைக்கும். இந்தப் பச்சிலைத் தைலத்தை கற்பூரத்துடன் சேர்த்து சாம்பிராணி புகையாகப் போடலாம். 

✍  தேங்காய் எண்ணெய்,  லாவண்டர் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்த்துக்கொள்ளலாம். கொசு அண்டாது. 

✍  புதினாவுடன் சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். கிடைக்கும் சாற்றை வீடு முழுவதும் தெளிக்கலாம். எலுமிச்சை பழத்தைப் பாதியாக வெட்டி ஜன்னல், கதவுகளின் மூலையில் வைக்கலாம். இவற்றிலிருந்து வரும் வாசனையும் கொசுவை விரட்டும். 






2 comments:

  1. நல்ல தகவல்கள் இந்த நேரத்திற்கு ஏதுவாய் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நன்றி

      Delete