Saturday 28 February 2015

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடக்கம்


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ராமேசுவரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது.

ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.

இலங்கையில் 1983-ம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப் பட்டது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல 112 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் படகுகளில் 3,278 ஆண்கள், 832 பெண்கள், 222 குழந்தைகள் என மொத்தம் 4,336 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள் ளனர். இதில் 250 பேர் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

முதல் நாளான பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5 மணியளவில் அந்தோணியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டு திருவிழா தொடங்கு கிறது. தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி பூசையும், சிறப்புத் திருப்பலி பூசையும் நடைபெறும். இரவு அந்தோணியாரின் தேர் பவனி நடைபெறும்.

விழாவின் 2-வது நாளான மார்ச் 1 ம் தேதி காலை 6 மணியளவில் சிறப்பு திருப்பலி பூசைகள் நடத்தப்படும். பின்னர் தேர் பவனியும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா நிறைவடைகிறது. 

No comments:

Post a Comment