Monday 23 February 2015

சென்னை புனித அந்தோணியார்


பதுவை அந்தோணியார் 
சென்னை பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரன்  தெருவில் செவ்வாய்க் கிழமைகளில் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கலாம். காரணம், அங்குள்ள தூய மரியன்னை தேவாலயத்தில் உள்ள பதுவை அந்தோணியாரின் சுரூபத்தை தரிசித்து, அவரிடம் அருள் வரங்களைப் பெற்றுச் செல்வதற்காகத்தான் இந்தக் கூட்டம். 

பாரிமுனையில் அர்மேனியர்கள் வாழ்ந்த பகுதி  அர்மேனியன் தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் மருவி அரண்மனைக்காரத் தெருவாக மாறிவிட்டது. 1660-ம் ஆண்டில் சென்னை வந்த அர்மேனியர்கள், பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியாளர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தனர். 

கோ ஜா பெட்ரஸ் அஸ்கன் என்பவர்தான் அர்மேனியர்களுக்கும் தலைவராக இருந்தார். ஆலயம் எழுப்புவதிலும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதிலும் தனது செல்வத்தை வாரி இறைத்தவர் அவர். சைதாப்பேட்டையையும், சின்னமலையையும் இணைக்கும் மர்மலாங் பாலத்தைக் கட்டியவர் இவரே. பக்தர்களின் வசதிக்காக தோமையார் மலையில் படிக்கட்டுகளையும் அவர் கட்டினார். 

தொடக்கத்தில் அர்மேனியர்களுக்கென தனியாக தேவாலயங்கள் ஏதும் அப்பகுதியில் இல்லை. கத்தோலிக்க கப்பூச்சியன் சபையினரின் தேவாலயங்களில் அவர்கள் வழிபட்டார்கள். பின்னர், தங்களுக்கென ஆலயம் அமைக்க ஆங்கிலக் கம்பெனியாரிடமிருந்து அர்மேனியன் தெரு முனையில் இடத்தை வாங்கி, 1712-ம் ஆண்டு 'அர்மேனியன் மாதா' என்ற ஆலயத்தை கட்டினர். (வாரிசு இல்லாத கோ ஜா பெட்ரஸ் அஸ்கன் தனது சொத்துக்களை தர்மத்திற்கு எழுதி வைத்தார். அவர் இறந்ததும், அவரது உடல் அர்மேனியன் மாதா தேவாலயம் முன்பு அடக்கம் செய்யப்பட்டது) 

அர்மேனியன் மாதா தேவாலயத்திற்கு அருகில் கத்தோலிக்க ஸ்பானிஷ் சபையினர் 1726-ம் ஆண்டு 'வானத்தூதரின் மாதா' ஆலயத்தைக் கட்டினார்கள். 1772-ம் ஆண்டு வரையப்பட்ட பிரம்மாண்டமான இயேசு மாதா ஓவியம் அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டது. 1928-ம் ஆண்டில் இந்த ஆலய நிர்வாகத்தை சலேசிய சபையினர் ஏற்றனர். முதல் பேராயராக மெதர்லேட் பதவி ஏற்றார். 1935-ம் ஆண்டு பேராயர் லூயிஸ் மத்தியாஸ் பொறுப்பேற்றார். 

இந்த பேராலயத்தின் இடதுபுறத்தில் உள்ள சிறு பீடத்தில், அற்புதங்கள் புரியும்
தூய மரியன்னை இணைப் பேராலயம் - பாரிமுனை 
புனித அந்தோணியாரின் சுரூபம் அமைந்துள்ளது. அவரது சுரூபம், பதுவை அந்தோணியாரின் தோற்றமல்லாத வித்தியாசமான தோற்றமாக இருந்தாலும், மக்கள் பதுவை அந்தோணியாராகவே அதைப் பாவித்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த சுரூபம் இந்த பேராலயத்திற்கு வந்த பின்னணி, சுவாரசியமான வரலாறைக் கொண்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட ராணுவ வீரர் ஒருவர், அலைகளால் இந்த சுரூபம் கரைக்கு அடித்து வரப்பட்டதைக் கண்டார். 

அது எப்படி, எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்தோணியார் பக்தரான அந்த வீரர், தீவுத் திடலுக்கு அடுத்துள்ள புனித பாட்ரிக் கல்லறை ஜெப மண்டபத்தில் வைத்து, பூபோட்டி, மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு போய்விட்டார். அது அர்மேனியன் தெருவில் உள்ள பேராலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லறையாகும். 

அந்த பகுதி சேரிவாசிகள், அது அந்தோணியாரின் சுரூபம் என்று நம்பி அதை வழிபடத்தொடங்கினர். வேண்டும் வரங்கள் கிட்டியதால், புனித அந்தோணியாரின் புகழ் அப்பகுதியில் பரவி, மக்கள் அதிகம் அந்த ஜெப மண்டபத்திற்கு வரத்தொடங்கினார்கள். 1936-ம் ஆண்டு பேராலய பங்குத் தந்தை சுலூஸ் அடிகள், அந்த சுரூபத்தை எடுத்து வந்து, வானத்தூதரின் மாதா பேராலயத்தின் இடதுபுறத்தில் சிறு பீடம் அமைத்து, அங்கு வைத்தார். அற்புத அந்தோணியாரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. 

இயேசுவையும், அந்தோணியாரையும் மறந்து அந்தோணியாரிடம் மக்கள் செல்கிறார்களே என்று வெறுப்படைந்த சுலூஸ் அடிகள், அந்த சுரூபத்தை மீண்டும் கல்லறையிலேயே கொண்டுபோய் வைத்துவிட்டார். அங்கு மக்கள் கூட்டம் பெருக, வெறுப்படைந்த அவர், அந்தோணியாரின் சுரூபத்தை கொண்டுவந்து, பேராலய கிடங்கில் வைத்துவிட்டார். 

ஆத்திரமடைந்த மக்கள், பேராயர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்த பேராயர் லூயிஸ் மத்தியாஸ் ஆண்டகை, அந்த சுரூபத்தை ஆலயத்திலேயே வைக்க உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் அந்த இடத்திலேயே அற்புத அந்தோணியாரின் சுரூபம் நிறுவப்பட்டது. 

அன்று முதல், நாடி வரும் பக்தர்களுக்கு ஏராளமான அற்புதங்களை புனித அந்தோணியார் நிகழ்த்தி வருகிறார். அவரது மகிமை சென்னைவாசிகளிடம் மட்டுமல்லாமல், தமிழகம், இந்தியா என கடந்து வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. சென்னை வரும் பக்தர்கள், அற்புத அந்தோணியாரை தரிசிக்காமல் செல்வதில்லை. 

No comments:

Post a Comment