Saturday 21 February 2015

பிப்ரவரி 21 - உலக தாய்மொழி தினம்!


ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழி நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.  

 உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6 ஆயிரத்து 200 ஆக இருந்த மொழிகள் இன்று 3 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானில் உருது அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952 ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் அதாவது தற்போதைய வங்கதேசத்தில் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர். 

1952 பிப்ரவரி 21 ஆம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பு 1999 ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது. 

உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும், எந்த மொழியையும் அழிக்கக் கூடாது, ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும்,  மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்க வேண்டும் என்று  உலக தாய்மொழிகள் தினம் வலியுறுத்துகிறது. 

இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய ஐரோப்பிய மொழிகளையும் 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment