Thursday 5 February 2015

எந்தெந்த ஊர் எது எதற்கு பிரபலம்?


தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

தஞ்சாவூரின் அடையாளமாக திகழும் தலையாட்டி பொம்மைகள் களிமண்ணால் செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவிரி ஆற்றின் களிமண்ணை கொண்டு செய்யப்படும் இந்த வகை பொம்மைகளை உருவாக்கும் பணியில் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி அல்வா


வட இந்தியாவிலிருந்து திருநெல்வேலி வந்த ஒரு குடும்பம் அல்வா தயாரித்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அது தாமிரபரணி நதியின் நீரில் தயாரிக்கப்பட முன்பை விட சுவையாக இருந்திருக்கிறது. எனவே அவர்கள் தொடர்ந்து திருநெல்வேலியில் அல்வா வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இப்படியாக திருநெல்வேலி அல்வா இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. அதிலும் நெல்லையப்பர் கோயிலின்  அருகே விற்பனை செய்யப்படும் 'இருட்டுக்கடை' அல்வா கடை வெகு பிரசித்தம்.


கொடைக்கானல் ஆப்பிள்


இந்தியாவில் காஷ்மீர் ஆப்பிளுக்கு பிறகு கொடைக்கானல் ஆப்பிள்தான் சுவையானது என்று சொல்லலாம். எனவே கொடைக்கானல் சுற்றுலா வரும்போது ஆப்பிளை சுவைத்து மகிழ்வதோடு, வீட்டுக்கு வாங்கிச் செல்லுங்கள்.


கும்பகோணம் வெத்தலை


கும்பகோணம் வெத்தலையை ஒரு தடவ போட்டுப் பாருங்க..நாக்கு சும்மா செவ செவன்னு எப்படி சிவக்கும் தெரியுமா? அப்பறம் வெத்தல போட்டு சோக்குலன்னு பாட்டு கூட பாடுவீங்க!


காரைக்குடி செட்டிநாடு உணவு


காரைக்குடி என்று சொன்னாலே காரசாரமான செட்டிநாடு சாப்பாடுதான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அது அசைவமா இருந்தாலும் சரி, சைவமா இருந்தாலும் சரி எல்லோரும் ஒரு புடி புடிக்கத்தான் செய்வாங்க.


மதுரை மல்லி


மல்லிகை பூவ எங்க வேணாலும் பாக்க முடியும். அந்த அளவுக்கு பரவலாக கிடைக்கக்கூடிய பூ அது. ஆனால் மதுரை மல்லியின் வாசனையே தனி. அந்த ஊரின் தெய்வீக மனத்துடன் இந்த மல்லியின் மனமும் சேர்ந்து நம்மை மயக்கம் கொள்ளச்செய்து விடுகின்றன.


காஞ்சிபுரம் பட்டுப்புடவை


கல்யாணம் காட்சியென்றால் இந்தியாவிலுள்ள பெரும்பாலோனோர் காஞ்சிபுரத்துக்குத்தான் வருகிறார்கள். காஞ்சிபுரம் பட்டுப்படவை இல்லாமல் தமிழ்நாட்டில் பல திருமணங்கள் நடப்பதே இல்லை!


பொள்ளாச்சி இளநீர்


'தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையை பெத்தா கண்ணீரு'ன்னு தென்னைமரத்தின் சிறப்பை பற்றி கூறுவதுண்டு. அந்த தென்னை மரங்கள் பொள்ளாச்சியில் அதிகமாக காணப்படுவதுடன், பொள்ளாச்சி இளநீருக்கென்று தனி கிராக்கி இருக்கிறது.


திருவாரூர் தேர்


ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக அறியப்படும் திருவாரூர் தேர் 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டது. இதன் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டிருப்பதுடன், இது ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்று இருப்பது இதன் சிறப்பை உணர்த்தும் மற்றொரு அம்சம்.


சிவகாசி பட்டாசு


சிவகாசி எதற்காக பிரபலம் என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட பதில் சொல்லும். சிவாகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


பழனி பஞ்சாமிர்தம்


தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து அமுதங்களை (பஞ்ச + அமிர்தம்) கொண்டு செய்யப்படுவதால் இதற்கு பஞ்சாமிர்தம் என்று பெயர் வந்தது. அதிலும் பழனியில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் அமிர்தத்திலும் அமிர்தம். இங்கு சித்தநாதன் விபூதி ஸ்டார் எனும் கடை பஞ்சாமிர்தத்துக்கு மிகவும் பிரசித்தம்.


சேலத்து மாம்பழம்


'மாம்பழமாம் மாம்பழம் சேலத்து மாம்பழம்' என்று குழந்தைகளுக்கான பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாட்டில் வருவது போல சேலத்து மாம்பழம் அவ்வளவு தித்திப்பாக இருக்கும். மேலும் இராஜாஜி அன்றைய சேலம் மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால் அவரை 'சேலத்து மாம்பழம்' என்று செல்லமாக அழைப்பதுண்டு.


ஊட்டி வரிக்கி


கருக் முருக்கென்று வரிக்கியை கடித்து சாப்பிடும் சுவையே தனி. அதிலும் ஊட்டி வரிக்கி என்றால் உணவுப் பிரியர்களின் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.


திண்டுக்கல் பூட்டு



திண்டுக்கல் பூட்டு என்றாலே பூட்டு ஞாபகம்தான் அனைவருக்கும் வரும். ஆனால் இன்று சீன மற்றும் மற்ற நவீன பூட்டுகளால் திண்டுக்கல்லில் பூட்டு விற்பனை நலிவடைந்துள்ளது. எனினும் திண்டுக்கல் பூட்டுகளில் காணக்கூடிய தரத்தினை இந்த வகை நவீன பூட்டுகளில் காண்பது அரிது.



No comments:

Post a Comment